Friday, December 29, 2023

பாவ அறிக்கையின் குணப்படுத்தும் வல்லமை: ஒரு லெந்து கால பயணம்

 யாத்திரை 4 | சனி | பிப்ரவரி 17

சங்கீதம் 51:4

தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.

 

நாம் லெந்து காலத்திற்குள் நுழையும்போது, சங்கீதம் 51:4-ல் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, பாவ அறிக்கையின் ஆழமான முக்கியத்துவத்தைக் குறித்து நாம் நினைவூட்டப்படுகிறோம்.

நம் பாவங்களை உண்மையாக அறிக்கையிடுவதன் மூலம், சுய பரிசோதனைக்கு ஒரு பரிசுத்தமான இடத்தையும், நம் இருதயங்களை கர்த்தரிடத்தில் திருப்புவதற்கான அழைப்பையும் பெற்றுக் கொள்கிறோம். பாவ அறிக்கையாகிய இந்தச் செயலில், நாம் நமது மீறல்களை ஒப்புக்கொள்வது மட்டுமல்லாமல், கர்த்தரிடமிருந்து மட்டுமே வரக்கூடிய தெய்வீக குணப்படுத்துதலுக்கும் மன்னிப்புக்கும் நம்மைத் திறக்கிறோம்.

பாவங்களை அறிக்கையிடுவது ஒரு தாழ்மையான மற்றும் உள்ளத்தைச் சுத்திகரிக்கக் கூடிய அனுபவமாகும். நம்முடைய வாழ்க்கையைப் பரிசோதித்துப் பார்க்கும் போது, நாம் எங்கே வீழ்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து, கர்த்தரின் இரக்கத்திற்கான நமது தேவையை ஒப்புக்கொள்ள அது உதவுகிறது. இது நமது பலவீனத்தை ஒப்புக் கொள்ளும் செயல். இது நமது சிருஷ்டிகரின் முன் நமது இருதயத்தை முழுமையாக வெளிப்படுத்துகிறது, அவர் மட்டுமே நமது அக்கிரமங்களிலிருந்து நம்மைச் சுத்திகரிக்க முடியும்.

லெந்து காலத்தின் போது, சுய பரிசோதனை ஒரு வழிகாட்டும் ஒளியாக மாறும். நமது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் ஆகியவற்றைச் சிந்தித்து, நீதியின் வழியில் இருந்து நாம் விலகிச் சென்ற பகுதிகளை அடையாளம் காண முற்படுகிறோம். இது ஒரு பயணம், நமது குறைபாடுகளை ஒப்புக் கொள்வதற்கும், அவற்றை கர்த்தரின் அன்பின் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கும் ஒரு சிறந்த நேரம். 

ஜெபம்: பரலோகப் பிதாவே, இந்த லெந்து காலத்தில், எங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, நொறுங்குண்ட இருதயத்தோடு உமக்கு முன்பாக வருகிறோம். எங்கள் மீறுதல்களை உணர்ந்து எதிர்கொண்டு உம்மிடம் பாவமன்னிப்புத் தேடும் வல்லமையை எங்களுக்குத் தந்தருளும். எங்களுடைய பாவ அறிக்கை புதுப்பித்தலுக்கும் குணப்படுத்துதலுக்கும் வழிவகுப்பதோடு, நாங்கள் பரிசுத்தமடைந்து உருமாற வழிவகுக்கும். எங்கள் இருதயங்களை உம்மை நோக்கி திருப்பும்போது எங்கள் சுய பரிசோதனைக்கு வழிகாட்டி, உமது சித்தத்திற்கு ஏற்ப வாழ்க்கையைத் தொடர எங்களுக்கு உதவும். உமது பரிசுத்த நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென். 

சுய பரிசோதனை: என்ன பாவங்கள் அல்லது மீறல்கள் உங்கள் இருதயத்தைப் பாரமாக்குகின்றன? அவற்றை அறிக்கையிடுவது இந்த லெந்து காலத்தில் உங்கள் ஆவிக்குரிய பயணத்தில் குணப்படுத்துவதற்கும் புதுப்பிப்பதற்கும் எவ்வாறு வழிவகுக்கும்?

No comments:

Post a Comment