19. யூதாஸ் இஸ்காரியோத்தின் வருத்தமும் துயர முடிவும்

வேத வாசிப்பு: மத்தேயு 27:35

 

தியானம்:

யூதாஸ் இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுத்தது வேதாகம வரலாற்றில் ஒரு கசப்பான மற்றும் சோகமான நிகழ்வு. இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவனாக, யூதாஸ் அவருடன் நெருக்கமாக நடந்து, அவருடைய போதனைகள், அற்புதங்கள் மற்றும் தேவ அதிகாரத்திற்குச் சாட்சியாக இருந்தான். ஆயினும், பேராசையால் உந்தப்பட்டு, சாத்தானின் செல்வாக்கால் (யோவான் 13:2, 27), முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவைப் பிரதான ஆசாரியர்களிடமும் மூப்பர்களிடமும் காட்டிக் கொடுக்க யூதாஸ் சோதனைக்கு அடிபணிந்தான் (மத்தேயு 26:1416).

 

இயேசு கண்டனம் செய்யப்பட்ட பிறகு தனது செயல்களின் விளைவுகளை உணர்ந்தபோது, யூதாஸ் மனஸ்தாபத்தை அனுபவித்தான். அவன் முப்பது வெள்ளிக் காசுகளைப் பிரதான ஆசாரியரிடமும் மூப்பரிடமும் திருப்பிக் கொடுத்து, "குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக் கொடுத்துப் பாவஞ்செய்தேன்" (மத்தேயு 27:34அ) என்று அறிக்கையிட்டான். இந்த அறிக்கையானது, யூதாஸ் தான் செய்த தவறையும் தான் காட்டிக்கொடுத்த இயேசு குற்றமற்றவர் என்பதையும் ஒப்புக் கொண்டதை முதன்மைப் படுத்திக் காட்டுகிறது.

 

என்றாலும், யூதாஸ் மனஸ்தாபத்தை வெளிப்படுத்தியது உண்மையான மனந்திரும்புதலுக்கு வழிநடத்தவில்லை. பேதுருவைப் போலல்லாமல், யூதாஸின் மனஸ்தாபம் இயேசுவிடம் திரும்பாததால் பூரணப்படாமல், அவனை மரணத்துக்கு இட்டுச் சென்றது. (லூக்கா 22:6162; எபேசியர் 1:119. யோவான் 21:1519), யூதாஸின் மனஸ்தாபம் தேவனை நோக்கி இருதயத்தைத் திருப்புவதோடு உடன் படிவில்லை. மாறாக, குற்ற உணர்வினாலும் விரக்தியினாலும் மூழ்கிப்போன யூதாஸ் அந்தப் பணத்தை ஆலயத்துக்குள் எறிந்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு, துயரகரமாக தன்னைத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் (மத்தேயு 27:5).

 

யூதாஸ் இஸ்காரியோத்தின் கதை தேவைப்படும் நேரத்தில் உண்மையான மனந்திரும்புதலின் முக்கியத்துவத்தையும் தேவனுக்கு திரும்புவதின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

 

பயன்பாடு:

  1. யூதாஸின் பேராசையும், சோதனைகளுக்கு அடிபணிந்ததும் நம்மை எச்சரிக்கையாக இருக்கச் செய்கிறது. நம்முடைய வாழ்க்கையிலும், பணம், செல்வாக்கு போன்ற தற்காலிகப் பேராசைகளை எதிர்த்துக் கட்டுப்படுத்த பழகுவோம்.
  2. யூதாஸின் மனந்திரும்பாத மனஸ்தாபம் யூதாஸின் வாழ்க்கையின் தவறுகளின் சுமைகளை வெளிப்படுத்தியது. நாமும் உண்மையான மனந்திரும்புதலுடன், கர்த்தரின் முன்னிலையில் நமது பாவங்களையும் குறைகளையும் ஒப்புக்கொண்டு மனம் திரும்புவோம்.
  3. யூதாஸின் தவறான முடிவுகளுக்கு மாறாக, நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் கர்த்தரின் பாதையில் நிலைத்திருப்போம். அவனுடைய வழி காட்டுதலையும் சித்தத்தையும் பின் பற்றுவோம்.

 

ஜெபம்:

  1. பேராசையின் கவர்ச்சியிலிருந்தும், ஆண்டவராகிய இயேசுவின் பாதையிலிருந்து உன்னை வழிதவறச் செய்யும் சோதனைகளிலிருந்தும் உனது இருதயத்தைக் காத்துக்கொள்ள அவரிடம் ஜெபி.
  2. பரிசுத்த ஆவியானவரைத் தவறவிடும் போதெல்லாம் உனது பாவத்தை உணர்த்தும், உண்மையான மனந் திரும்புதலுக்கு வழிநடத்தும்படி ஜெபி.
  3. மனஸ்தாபத்தோடும் குற்ற உணர்வோடும் போராடுகிறவர்களுக்காக பிதாவாகிய தேவனிடம் ஜெபி. அவர்களும் கிறிஸ்துவில் உண்மையான மன்னிப்பையும் மீட்பையும் காணட்டும்.

 

சுய பரிசோதனை:

  1. என்னுடைய சொந்த பாவங்களையும் தோல்விகளையும் எதிர்கொள்ளும் போது நான் எவ்வாறு உணர்கிறேன்? நான் வெறுமனே வருத்தப்படுகிறேனா அல்லது கர்த்தருக்கு முன்பாக உண்மையான மனந்திரும்புதலை நாடுகிறேனா?
  2. பேராசை அல்லது லட்சியம் போன்ற யூதாஸைத் தவறாக வழிநடத்திய சோதனைகள் போல், என் வாழ்க்கையில் சோதிக்கப்ப்டடு நான் பாதிக்கப்படுகிறேனா?

Comments